நாடு முழுவதும் நித்தி.யின் சொத்துக்கள் எவ்வளவு?.. ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கர்நாடக போலீசுக்கு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகா: பாலியல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நித்தியானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகளை கர்நாடக போலீசார் மேற்கொண்டுள்ளனர். நித்தியானந்தாவுக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள ஆசிரமம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளிக்குமாறு கர்நாடகா போலீசாருக்கு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கம் போல இன்றும் நித்தியானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கர்நாடகா சிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நித்தியானந்தாவை உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் கைது செய்து ஆஜர் படுத்த ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாடு முழுவதும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமங்கள், அசையும், அசையா சொத்துக்களின் பட்டியலை வரும் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் நித்தியானந்தா ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த லெனின் கருப்பனுக்கு ராம்நகர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள வாரண்டடியையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Related Stories: