ICC தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா

மும்பை: மகளிர் கிரிக்கெட் T20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 16 வயதேயான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 18 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹரியானாவைச் சேர்ந்த ஷஃபாலி வெர்மா, முதன்முதலாக தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய அணியை பெருமைப்படுத்தியுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா. இவர் நடைபெற்று வரும் மக‌ளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.

இந்திய அணி விளையாடி முடித்துள்ள நடப்பு உலகக்கோப்பை தொடரின் மூன்று போட்டிகளிலும் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்நிலையில் நான்காவது லீக் போட்டியில் இவர் தன்னுடைய அதிரடியால் மிரட்டியுள்ளார். 2018ம் ஆண்டு முதல் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் சுஸி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி 19 இடங்களில் முன்னேறி 761 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் ஷஃபாலி. இதுமட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

சச்சின் தனது 16வது வயதில் முதல் அரைசதம் அடித்தார். அதே வயதில் வீராங்கனை ஷஃபாலி 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். 30 ஆண்டுகளாக இருந்துவந்த சச்சினின் இந்தச் சாதனையை தற்போது ஷஃபாலி முறியடித்துள்ளது கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, பவுலிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடம் வகிக்கிறார். இந்தத் தகவலை ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related Stories: