ஹைட்ரோ கார்பன் திட்ட வழக்கு வலுவான காரணம் இருப்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வலுவான காரணங்கள் உள்ளது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், முதலில் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு நேற்று அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும், மக்களின் கருத்துகளையும் பெற வேண்டியது என்பது அவசியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்,”அதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதியோ அல்லது மக்களின் கருத்தை கேட்கவோ தேவையில்லை என குறிப்பிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.  

இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த 16ம் தேதி வெளியிட்ட தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. காவிரி டெல்டா பகுதியில் முற்றிலுமாக விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் அவல நிலையை இது கண்டிப்பாக உருவாக்கும். அதனால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து, அதனை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தவிர விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் இதுபோன்ற மத்திய அரசின் திட்டம் என்பது சட்டவிரோதமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று மேற்கண்ட மனு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பித்த உத்தரவில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வலுவான காரணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இது ஒரு தகுதியான வழக்கும்கூட, இருப்பினும் மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. இதையடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவை பொருத்து வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: