கோழிக் கழிவுகளால் மாசடையும் கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கூடலூர்: கூடலூரில் உள்ள ஒட்டான்குளம் கண்மாயில், கோழிக் கழிவுகளை கொட்டும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியாக கூடலூர் நகராட்சி உள்ளது. இப்பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நகராட்சியில் 37.65 ஏக்கர் பரப்பளவில் ஒட்டான்குளம் என அழைக்கப்படும் மைத்தலை மன்னாடிக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் 500 ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. முல்லைப்பெரியாறிலிருந்து 18ம் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, கண்மாயில் சுமார் 9.110 மில்லியன் கனஅடி நீர் தேக்கப்படுகிறது. மேலும், இப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது.

இந்நிலையில், நகராட்சியில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து, தினசரி கோழி இறைச்சிக் கழிவுகளை ஒட்டான்குளம் கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால், தண்ணீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலும் கெடுகிறது. கண்மாய் நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒட்டான்குளம் கண்மாய் கரையை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகள் வயல்வெளிக்கு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, கண்மாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜீவ் கூறுகையில், ‘நகராட்சியில் உள்ள கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து கொண்டுவரும் கழிவுகளை கண்மாயிலும், கரைப்பகுதியிலும் கொட்டுகின்றனர். இறைச்சிக் கழிவுகளை தின்பதற்காக நாய்களும் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இவைகளின் தொல்லையால், விவசாயிகள் வயல்வெளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். நகராட்சி நடவடிக்கையால் சில மாதங்களாக அமைதியாக இருந்த இறைச்சிக் கடைக்காரர்கள் தற்போது மீண்டும் குளத்தில் கழிவுகளை கொட்ட தொடங்கி உள்ளனர். இதனால், குளத்துநீர் மாசுபடுகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைக்கும் நோய் ஏற்படுகிறது. எனவே, கண்மாயில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: