மண்டலாபிஷேகம் நிறைவு விழா தஞ்சை பெரியகோயிலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு நேற்றுடன் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. இதில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5ம் தேதி குடமுழுக்கு விழா வெகுசிறப்பாக நடை பெற்றது. தொடர்ந்து 6ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். 48 நாட்கள் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி சித்திரை பெருவிழாவை முன்னிட்டு 24 நாட்களாக குறைக்கப்பட்டது.

24ம் நாளான ேநற்று (1ம்தேதி) மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. இதற்காக நடராஜர் சன்னதி அருகில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகியோருக்கு 5 குண்டம் மற்றும் வேதிகை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாபூர்ணாஹூதி நடை பெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணாஹூதி, தீபாரதனை, யாத்ராதானம் நடந்தது. இதை தொடர்ந்து, கடம்புறப்பட்டு, சிவச்சாரியார்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பெருவுடையாருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, குடத்தில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக நிறைவையொட்டி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தஞ்சை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மண்டலாபிஷேகம் பூர்த்தியான நிலையில், மீதமுள்ள 24 நாட்களும் மூலவர்களுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்படும் என சிவச்சாரியார்கள் தெரிவித்தனர்.

Related Stories: