பெசன்ட் நகர் கடற்கரை, ஆதம்பாக்கத்தில் துணிகரம் சென்னையில் ஒரேநாளில் 2 பெண் குழந்தைகள் கடத்தல்: 5 பேர் கைது: 1.15 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் ஒரே நாளில் 2 பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, போலீசார் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். கும்பகோணம், சுவாமிமலை, ஏழுமலை தெருவை சேர்ந்தவர் பாட்ஷா (27). நரிக்குறவர். இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. சினேகா தனது குழந்தையுடன்  கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகர் வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பலூன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தினார். நேற்று முன்தினம் மாலை வியாபாரம் முடிந்து பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அருகே படுத்து தூங்கியுள்ளனர். மறுநாள் காலை குழந்தை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து  சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சினேகா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை ஒரு பெண் தூக்கி செல்வதும்,  மற்றொரு கேமராவில் 3 பெண்கள், ஒரு ஆண் ஆட்டோவில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் பகலவன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்திய ஆட்டோ  பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அந்த கும்பல் கே.கே.நகர் நெசப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படையினர் அங்கு சென்று 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் காரைக்குடியை சேர்ந்த மேரி (35), அவரது மகன் ரூபன் (19) மற்றும் சைதாப்பேட்டை அபித் காலனியை சேர்ந்த திருப்பதி அம்மாள் (42), அவரது மகள் பாலவெங்கம்மாள் (19) என்பது தெரிய வந்தது. மேலும், புதுக்கோட்டை, மரமடக்கி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (45) என்பவர் குழந்தையை கடத்தி வந்து கொடுப்பதற்கு 2 லட்சம் பணம் தந்ததாகவும், அதற்காக குழந்தையை கடத்தியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து 1.15 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் குழந்தையை மீட்டு தாய் சினேகாவிடம் ஒப்படைத்தனர்.

மற்ெறாரு சம்பவம் ஆதம்பாக்கம் சவுத் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகள் ரெஜினா மற்றும் பேத்தி  ஜாக்குளின் (7). இவர்கள் 3 பேரும் ராயப்பேட்டையில் உள்ள சர்ச்சுக்கு செல்ல கால்டாக்சி வரவழைத்தனர். கால்டாக்சி  டிரைவர் வீட்டருகே வந்ததும் ரெஜினாவும்  மகள் ஜாக்குளினும் காரில் ஏறியுள்ளனர். நீண்ட நேரமாகியும் தந்தை ஜான்சன் வராததால் அவரை அழைத்து வர ரெஜினா மட்டும் காரைவிட்டு இறங்கினார்.  தந்தையை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தார். அங்கு கால்டாக்சி  இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது பேத்தியை கால்டாக்சி டிரைவர் கடத்தி விட்டதாகக்கூறி கதறி அழுதனர்.

பின்னர், குடும்பத்தோடு ஆதம்பாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். புகாரை பெற்ற ஆதம்பாக்கம் போலீசார் செல்போன் மூலம் கால்டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு சிறுமியுடன் எங்கே இருக்கிறாய் என்று கேட்டபோது  ராயப்பேட்டை சர்ச் எதிரே இருப்பதாகவும்,  சிறுமியை அழைத்து செல்ல யாரும் வராததால் அங்கேயே காருடன் நின்றுகொண்டிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று  சிறுமியை மீட்டும் கால்டாக்சி டிரைவரை கைது செய்தும் காவல்நிலையம்கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அதில், தனது பெயர் ராஜாராம் (25) என்றும், புதிதாக கால்டாக்சி டிரைவராக வேலையில் சேர்ந்ததாகவும், சிறுமியை கடத்தவில்லை என்றும், அவரது தாயார் ராயப்பேட்டை சர்ச்சுக்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டு  காரைவிட்டு இறங்கி சென்றதால் சிறுமியை ராயப்பேட்டையில் விடவேண்டும் என எண்ணி காரை எடுத்து சென்றதாகவும் கண்ணீருடன்  தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் புகார் கொடுத்தவர்களை வரவழைத்த போது, எங்களது  சிறுமி வந்து விட்டதால் புகார் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கூறிவிட்டனர். ஆனால் ஆதம்பாக்கம் போலீசாரோ  டிரைவர்  ராஜாராமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: