கொல்லம் அருகே மாயமான சிறுமி ஆற்றில் வீசி கொலையா?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார். அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தன்யா. தம்பதிக்கு 6 வயதில் தேவநந்தா என்ற மகள் இருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவநந்தா படித்து வந்த பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. இதையடுத்து நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தேவநந்தா பள்ளிக்கு செல்லவில்லை. 2 பேரும் தனியாக வீட்டில் இருந்தனர். தொடர்ந்து நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் தேவநந்தா வீட்டின் முன் பகுதியில் விளையாடி ெகாண்டிருந்தார். பின்புறம் தன்யா துணி துவைத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார். அப்போது தேவநந்தாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தன்யா மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது யாரும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் கொட்டியம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

இது தவிர வாட்ஸ்-அப், பேஸ்-புக் உள்பட சமூக வலைத்தளங்களிலும் தேவதன்யாவின் படத்துடன் மாயமான செய்தி வெளியானது. நேற்று மாலை வரை சிறுமி குறித்து எந்தவித தகவலும் இல்லை. இவர்களது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஆறு உள்ளது. ஒருவேளை சிறுமி ஆற்றில் தவறி விழுந்திக்கலாம்? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறை, போலீசார் ஆற்றில் இறங்கி தேடினர். பல மணிநேர தேடலுக்கு பிறகும் நேற்று இரவு வரை எந்தவித தகவலும் இல்லை. இதற்கிடையே மகள் மாயமானது குறித்து பிரதீப்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவசரம் அவசரமாக அவர் ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை தீயணைப்புத்துறையினர் மீண்டும் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போலீசில் புகார் செய்தனர். சிறுமி தனியாக ஆற்றுக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லாததால், யாராவது அவரை கடத்தி ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும் கூறினர்.

ஆகவே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர். சிறுமியின் மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, அமைச்சர்கள், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயமான சிறுமி திடீரென சடலமாக மீட்கப்பட்டது  அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: