கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை..டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்: ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் உறுதி

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தடை ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் சிலரும் ஒலிம்பிக் போட்டியை விட வீரர்களின் உடல்நலமே முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அயன் தோர்ப் தெரிவித்ததாவது, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்க மறுத்துள்ளது. டோக்கியோவில் இதுகுறித்து விளக்கம் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது தான் எங்கள் நோக்கம் என்று உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து, போட்டியை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ எந்தவித திட்டமும் இல்லை என்று தாமஸ் போச் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: