அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்; உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை : அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக அரசு அரசாணை

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே தமிழக அரசின் அடிப்படை விதிமுறைகளில் உள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை முறையாக அணிவதில்லை.இதற்கிடையில் , 16.7.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அடையாள அட்டை குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களளும் தங்களது பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்விதியை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆணையிட்டார்.இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை சுற்றறிக்கை

இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில், அலுவலக நேரங்களில் அடையாள அட்டையை ஊழியர்கள் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், ஊழியர்கள் யாரும் அடையாள அட்டையை அணிவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்யவேண்டும். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியான  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: