திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் அனுமதியின்றி செயல்படும் யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுச்சேரி மாநிலம் புதிய மாஹி சாலக்கராவைச் சேர்ந்த தீபக் நம்பியார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமிற்கு சட்டப்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மத்திய மிருக காட்சி சாலை  ஆணையரகத்தின் அனுமதி பெறப்படவில்லை. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை வனத்துறை அல்லாத இதர வகையில் பயன்படுத்துவதற்கான உரிய அனுமதியும் பெறவில்லை. வனத்துறை நிலத்தில் பலவித பயன்பாட்டிற்கான  கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

 வனத்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி, இதற்காக செலவிடப்படுகிறது. அனுமதி ெபறாத முகாமில் எப்படி யானைகள் பாதுகாப்புடன் இருக்க முடியும். எனவே, உரிய அனுமதியின்றி சட்டவிரோத யானைகள் மறுவாழ்வு முகாம் செயல்படத் தடை  விதிக்க வேண்டும். இந்த முகாமிற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியை ஒதுக்கத் தடை விதிக்க வேண்டும். அங்குள்ள யானைகளின் நலன் கருதி அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்  கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், முதன்மை தலைமை வன பாதுகாவலர்,  எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாம் அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: