மாநிலங்களவை எம்பி பதவி கேட்டு அதிமுகவுக்கு தேமுதிக திடீர் நெருக்கடி: கட்சிக்குள்ளும் கடும் போட்டி

சென்னை: மாநிலங்களவை எம்பி பதவி கேட்டு அதிமுகவுக்கு தேமுதிக திடீர் நெருக்கடி கொடுத்துள்ளது. சீட் தராவிட்டால் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா  சத்தியானந்த, சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேர் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்பிக்களை தமிழக எம்எல்ஏக்கள்  தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது அதிமுக சார்பில் 125 எம்எல்ஏக்கள், திமுக சார்பில் 100 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என  திமுக கூட்டணியில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதனால் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற  வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட வருகிற மார்ச் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 10 நாட்களே உள்ளதால், அதற்குள் வேட்பாளர்கள்  யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

அதன்படி, தற்போது அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க அதிமுக கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக கட்சியின் துணை  ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன்,கோகுலஇந்திரா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதேபோல, தற்போது எம்பியாக உள்ள விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன் ஆகியோரும் சீட் கேட்டு வருகின்றனர்.அதேபோல, தேவேந்திரகுல வேளாளர்கள் 6 தொகுதியில் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்ததால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது. இதனால் தங்கம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு எம்பி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்து வருகின்றனர். அதில், சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, தூத்துக்குடி சின்னத்துரை ஆகியோரில் ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சின்னத்துரைக்கு அந்த  மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். ஆனால், முத்துச்செல்விக்கு சீட் வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவிலைச் சேர்ந்த அமைச்சர் ராஜலட்சுமியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். அவருக்கு எம்பி சீட்  கொடுத்தால், சங்கரன்கோவில் தொகுதிக்கு தனக்கு போட்டியாக வரமாட்டார் என்று அமைச்சர் கருதுகிறாராம். இப்படி ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னையில் பேட்டி அளித்தபோது, “அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தபோது ராஜ்யசபா சீட் கேட்டோம். பின்னர் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதி அளித்தனர். நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம். அதிமுக கட்சி தலைமையும் கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபை சீட் தர வேண்டும். தருவார்கள்  என்று நாங்களும் நம்புகிறோம்” என்றார்.

இதுபற்றி திருச்சி முக்கொம்பு பகுதியில் நடைபெறும் தடுப்பணை பணிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, “அதிமுக சார்பில் மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு பதவி  வழங்க வேண்டும். தேமுதிக கோரிக்கை பற்றி அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்று கூறினார். தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என்றோ, வழங்க முடியாது என்றோ முதல்வா  கூறவில்லை.

இந்த நிலையில், தேமுதிகவுக்கு எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எப்படியாவது பிரேமலதா, தனது தம்பி சுதீஷை எம்பியாக்கி விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு பலன்  கிடைக்காமல் போகிறது. அதனால், இந்த முறை எப்படியும் அதிமுகவிடம் இருந்து மாநிலங்களவை எம்பி சீட் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஒரு சீட் தந்தால் தான் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தரும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கவும் பிரேமலதா திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற  மிரட்டலுக்கு அதிமுக தலைமை பணியுமா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

பாஜ பேசினால் பணியுமா?

பாஜகவும் அதிமுகவிடம் இருந்து ஒரு மாநிலங்களவை எம்பி சீட் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜகவினர் தொடர்பு கொண்டு வருகிறார்கள். தமாகா தலைவர்  ஜி.கே.வாசனும், இதுபற்றி அமித்ஷாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. அமித்ஷா நேரடியாக பேசினால், அதிமுக தலைமை சீட் வழங்கிவிடும் என்றே கூறப்படுகிறது.இதுபோன்று கூட்டணி கட்சிகள் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதால், அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு எம்பி சீட் கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: