டெல்லி போலீஸ் மீது மக்களுக்கு ஏற்பட்டு உள்ள அவநம்பிக்கையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உறுதி

டெல்லி : டெல்லியில் துப்பாக்கியுடன் நடமாட யாரையும் அனுமதிக்க முடியாது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில்  நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.இந்த மோதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு

இதனிடையே, கோகுல்புரியில் பழைய இரும்பு கடைக்கு கும்பல் ஒன்று இன்று காலை தீ வைத்தது. இதையடுத்து அதை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டுப்படுத்தினர். கலவரம் தொடர்வதால் வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட காவல்துறையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

அஜித் தோவல் நேரில் ஆய்வு

இதனிடையே, வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியின் கிழக்கு பகுதியில் பதற்றம் நிறைந்த இடங்களில் அஜித் தோவல் நேற்றிரவும், இன்று காலையும் நேரில் ஆய்வு நடத்தினார். பின்னர் வடகிழக்கு டெல்லி சீலம்பூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அஜித் தோவல் அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம்

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி வன்முறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வன்முறை தொடர்பான பாதுகாப்பு மற்றும் விசாரணை குறித்த தகவல்களை அஜித்தோவல் விளக்கினார்.

அஜித் தோவல் எச்சரிக்கை

இதையடுத்து டெல்லியில் துப்பாக்கியுடன் நடமாட யாரையும் அனுமதிக்க முடியாது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் டெல்லி போலீஸ் மீது மக்களுக்கு ஏற்பட்டு  உள்ள அவநம்பிக்கையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சிறுபான்மை சமூகத்தினருடன் டெல்லி நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்த அஜித் தோவல்,பொதுமக்கள் இடையே உள்ள அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தை மதிக்கும் பொதுமக்கள் எந்த வகையாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார்.

Related Stories: