3 ஆண்டில் டிக்கெட் ரத்து மூலம் ரயில்வேக்கு 9,000 கோடி வருவாய் : ஆர்.டி.ஐ.யில் கிடைத்த தகவல்

கோடா: முன்பதிவு டிக்கெட் ரத்து, காத்திருப்போர் பட்டியலில் ரத்து செய்யப்படாத டிக்கெட் ஆகியவற்றின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வேக்கு 9,000 கோடி வருவாய் கிடைத்துள்து. சமூக ஆர்வலர் சுஜீத் சுவாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய விவரங்களுக்கு பதில் அளித்து ரயில்வே தகவல் ஆணைய மையம் அளித்த விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 ஜனவரி 1ம் தேதி முதல் 2020  ஜனவரி 31ம் தேதி வரையிலான, மூன்று ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியலில்  இருந்து டிக்கெட்டை ரத்து செய்யாத 9.5 கோடி பயணிகளின் டிக்கெட் மூலம் ரயில்வேக்கு 4,335 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல, படுக்கை  வசதி உறுதியான டிக்கெட்டை ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 4,684 கோடி  வருவாய் கிடைத்துள்ளது. இதில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் ரத்து  முதலிடத்திலும், மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதி, இரண்டடுக்கு ஏசி படுக்கை  வசதி டிக்கெட் ரத்து 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் இல்லை: இதேபோல் கடந்த 11 மாதங்களில் ரயில் விபத்துக்களின்போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டு 166 ஆண்டுகள் ஆன நிலையில் முதல்முறையாக ரயில் விபத்தில் உயிரிழப்புக்கள் இல்லாத ஆண்டு என்ற சாதனையை 2019-20 படைத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி கடந்த 24ம் தேதி வரையிலான 11 மாதங்களில் ரயில் விபத்துக்களின்போது யாரும் பலியாகவில்லை. இதற்கு அனைத்து வகைகளிலும் ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவே அதிகம்

ஆர்டிஐ. தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன், டிக்கெட் கவுன்டர்களில்  முன்பதிவு செய்பவர்களின் எண்ணிகையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இதில்,  ஆன்லைன் மூலம் 145 கோடிக்கு மேற்பட்டோரும், டிக்கெட் கவுன்டர்களில் ஏறக்குறைய 74 கோடி பயணிகளும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்’ என்று  கூறப்பட்டுள்ளது.

Related Stories: