செயல்படாத தமிழக அரசின் உத்தரவு; பள்ளிகளில் மாணவர்கள் மறந்துபோன போக்குவரத்து உறுதிமொழி நிகழ்ச்சி: பெற்றோரும் அலட்சியம் காட்டுவதாக புகார்

வேலூர்: பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு போக்குவரத்து உறுதிமொழி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், போதிய பயிற்சி இல்லாமலும் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும். எனவே 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. ஆனால், கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்து அனுப்பி பெற்றோரும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் வாரந்தோறும் போக்குவரத்து உறுதிமொழி நிகழ்ச்சி நடத்த கடந்த 2015ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருப்பதாக கல்வி ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘விபத்தில் உயிரிழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு போக்குவரத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த உறுதிமொழியில் லைசென்ஸ் பெறாமல் வாகனம் ஓட்டமாட்டேன், சாலை விதிகளை பின்பற்றுவேன் என்பது உள்ளிட்ட 9 வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த நிகழ்ச்சிகள் நடத்துவதை தலைமை ஆசிரியர்கள் மறந்துவிட்டனர். மாவட்ட கல்வி அலுவலர்களும் இதை கவனிக்காமல் விட்டுவிட்டனர். சாலை பாதுகாப்பு வார விழாவின்போது மட்டுமே பள்ளிகளில் உறுதிமொழி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு அடையாமல் உள்ளனர். மேலும் ஒரு சில மாணவர்கள் பள்ளிகளுக்கு பைக்கில் வருகின்றனர். பெற்றோரும் ஆபத்தை உணராமல் மாணவர்களிடம் பைக்கை கொடுத்து அனுப்பி விடுகின்றனர். எனவே, பெற்றோரும் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல், பள்ளிகளில் வாரந்தோறும் போக்குவரத்து உறுதிமொழி நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்’ என்றனர்.

கைக்குழந்தைகள் விஷயத்திலும் அலட்சியம்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து ெகாண்டே செல்கிறது. குறிப்பாக முன்பக்க சக்கரத்தை தூக்குவது போன்ற பைக் சாகசங்களால் விதிமுறையை பின்பற்றுபவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் குழந்தைகளை பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்தபடி செல்கின்றனர். ஏற்கனவே சென்னையில் 5 வயது குழந்தை பெட்ரோல் டேங்க் மீது இருந்து விழுந்து, தந்தை கண்ணெதிரே பலியான கோர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகும் பெட்ரோல் டேங்க் மீது குழந்தைகளை அமர வைத்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் குழந்தைகள் தூங்கிவிட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்று குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை

சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில், சிறுவர்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு ₹25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். அதோடு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பெற்றோருக்கு விதிக்க முடியும். இதுதவிர லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை லைசென்ஸ் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்க முடியும். அதேநேரத்தில் சிறுவர்கள் பைக் ஓட்டி விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் லைசென்ஸ் கிடைக்காது. இதுபோன்ற கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் பெற்றோர் எந்தவித அச்சமுமின்றி அலட்சியமாக உள்ளனர். எனவே, இதுபோன்ற சட்டங்களை விரைந்து செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே பெற்றோருக்கும் பொறுப்பு ஏற்படும் என்று கருத்து எழுந்துள்ளது.

Related Stories: