தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு: ஆலந்தலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருச்செந்தூர்: ஆலந்தலையில் தூண்டில்  வளைவு அமைக்க ரூ.52.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்ததையடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 160 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கல்லாமொழி கடற்கரையில் அனல் மின் நிலைய திட்டப்பணிகள் நடைபெறுவதால் ஆலந்தலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு அலைகள் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை தெரியப்படுத்தியதன்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பேராசிரியர்களால் ஆய்வு நடத்தப்பட்டு தூண்டில் வளைவுக்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி ஆலந்தலை கிராம நலக் கமிட்டியினர் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்து கடந்த இருவாரங்களுக்கு முன் மனு அளித்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆலந்தலை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் சிவந்திஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆலந்தலை கிராம நலக்கமிட்டியினர் சந்தித்து முறையிட முடிவு செய்து, கடல் தொழிலுக்கு போகாமல் விழாவுக்கு வந்திருந்தனர். அப்போது விழா மேடையில் ஆலந்தலையில் தூண்டில்  வளைவு அமைக்க ரூ.52.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிய ஆலந்தலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories: