அனுமதி வழங்கும் விதிமுறைகளை தளர்த்த வலியுறுத்தல் குமரியில் பாசனக்குளங்கள் தூர்வாரப்படுமா?... கோடைக்கு முன்னரே விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தபோது 5 ஆயிரத்து 500 குளங்கள் பயன்பாட்டில் இருந்தன. பின்னர் நடைபெற்ற மறு அளவீடுகளின்படி தற்போது வருவாய்துறை ஆவணப்படி மாவட்டத்தில் 4500 குளங்கள் உள்ளன. இதில் 100 குளங்கள் நிலவியல் குளங்கள் என்று தனியார் வசம் உள்ளவை ஆகும். 1000 குளங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. 150 குளங்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவைதவிர சுமார் 3250 குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை ஆகும். மாவட்டத்தில் நீண்ட நாட்களாக குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்து வந்த நிலையில் குளங்களை அரசே தூர்வார வேண்டும் அல்லது விவசாயிகளை தூர்வார அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

அதன் பயனாக மூன்றாண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் 50 குளங்கள் குடிமராமத்து  திட்டத்தில் தூர்வாரப்பட்டது. மேலும் விவசாயிகள் நேரடியாக தூர்வாரும்படி அரசாணை 50ன்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த பணிகள் இரண்டும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் தூர்வாரி மண் எடுக்க தயார் நிலையில் உள்ளது, தண்ணீர் இல்லாத குளங்கள் பட்டியல் அந்தந்த நிர்வாக அமைப்பிடம் இருந்து கலெக்டர் பெற்று கனிமவளத்துறை வாயிலாக அரசிதழில் வெளியிடப்பட்டது. 4 ஆயிரத்து 500 குளங்கள் ஆவணங்களின்படி இருந்தாலும் 2 ஆயிரம் குளங்கள் தூர்வார தகுதியுடையவை என்று அப்போது அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த குளங்கள் மட்டுமே மண் எடுக்க தகுதியானவை என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வறட்சியை பயன்படுத்தி சுமார் 10 மாதங்கள் வரை குளங்கள் தூர்வாரும் பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.

முதலில் இலவசமாகவும், பின்னர் ரூ.100 கட்டணம் செலுத்தியும் அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம் 500 குளங்களில் பணிகள் நடைபெற்றபோதிலும் 400 குளங்களில் லேசாக மட்டுமே தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. 50 குளங்கள் 75 சதவீதம் தூர்வாரப்பட்டன. முழுமையாக தூர்வாரப்பட்டது 50 குளங்கள் மட்டுமே என்று கூறும் வகையில் பணிகள் நடைபெற்றது. அதே வேளையில் அதிக பரப்பளவு உள்ள குளங்கள் முழுமையாக பொதுமக்களால் தூர்வாரப்படவில்லை.

இதற்கிடையே பொதுமக்கள் வண்டல் மண் எடுத்த சில குளங்களை குடிமராமத்து பணிகள் நடைபெற்றததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலியாக கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டின.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டது.

அதன் பின்னர் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க தாசில்தார் வாயிலாக உத்தரவு பெற்று கொடுத்தாலும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதற்கு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்து வருகிறது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை. மண் எடுக்கும்போது குடிமராமத்து திட்டத்தில் மண் அள்ளி குளத்தின் கரையில் வைத்தனர். வீடுகள், சாலைகள் பகுதிகளில் இது புதிய பிரச்னைகளை ஏற்படுத்தியது. மண்ணை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுவும் ஏற்கப்பட்டு குடிமராமத்து பணிகளில் குளங்களில் இருந்து மண்ணும் வெளியே எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள 50 குளங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

இதற்கு அரசியல் கட்சியினர் உள்ளே நுழைந்து மண் விற்பனைக்கு திட்டமிட்டு அது நடைபெறாததால் குளத்தை ஒப்பந்தம் எடுத்து பணி செய்ய பலரும் முன்வரவில்லை. குடிமராமத்து பணியில் கரையில் மண் வைக்க வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் மண் வெளியே செல்லாததால் பணிகள் தீவிரமாக நடைபெற்றவில்லை. எனவே மண்ணை கரையில் வைப்பது தவிர்த்து வெளியே கொண்டு செல்ல அனுமதித்தால் மட்டுமே குளங்கள் தூர்வாரப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். குமரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட 2000 குளங்கள் பட்டியலில் 100 குளங்கள் பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உள்ளவை ஆகும். எனவே பொதுப்பணித்துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியில், மாநகராட்சி பகுதிகளில் தூர்வார தகுதியான இதர அனைத்து குளங்களையும் தேர்வு செய்து உடனே அரசிதழில் வெளியிட வேண்டும்.

முன்னதாக பேரூராட்சி, கிராம ஊராட்சி, பொதுப்பணித்துறையிடம் விடுபட்ட குளங்கள் பட்டியலை அதிகாரிகள் பெற வேண்டும். கீழ்நிலை அதிகாரிகளை கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை. பேரூராட்சிகள் 350 குளங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். கிராம ஊராட்சிகள் 100, 150 குளங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த பணிகளை தற்போது முடித்தால் மட்டுமே கோடையில் குளங்கள் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள இயலும் நிலை ஏற்படும். குளங்கள் தூர்வாரப்பட்டால் மட்டுமே மழைக்காலங்களில் நீர்நிரம்பி குமரி மாவட்டம் வறட்சியை தாக்குபிடிக்கும் நிலை உருவாகும்.

குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்படும்

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுகுமாரன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நடப்பு கோடைகாலத்தில் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தில் 20 குளங்கள் தூர்வாரப்பட உள்ளது. மேலும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டு மடைகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும். இது தொடர்பான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கப்பெற்ற உடன் பணிகள் தொடங்கப்படும். மாவட்டத்தில் பாசனத்திற்காக அணைகளில் இருந்து வரும் 29ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். பின்னர் அணைகள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் தாமதப்படுத்த வேண்டாம்

குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தூர்வார தகுதியுள்ள குளங்கள் பட்டியலை புதுப்பித்து மாவட்ட நிர்வாகம் உடனே அரசிதழில் வெளியிட வேண்டும். குளங்களை தூர்வார தாசில்தார்கள் உத்தரவு போடும் தருவாயில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான பாஸ் வழங்க கால தாமதம் செய்யக்கூடாது. பொதுவாக விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மனுக்கள் தாசில்தார்களிடம் நிலவரி ரசீது, கம்ப்யூட்டர் பட்டா மூலம் மனு அளிக்க வேண்டும். அவர்கள் உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அல்லது பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். அங்கு லோடிங் சார்ஜ் கட்டணம் அளித்து அதன் பின்னர் குறித்த காலத்தில் விவசாயிகள் மண் எடுக்கலாம். பேரூராட்சி, ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் மண் எடுக்கவும், தூர்வாரவும் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தற்போது கடந்த மூன்று மாதங்களில் தாசில்தார் அளித்த உத்தரவுகள் சுமார் 50க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன. இதனால் அரசுக்கும் இழப்பு உள்ளது. அடுத்து வரும் 4 மாதம் குளங்களை தூர்வாரி மண் எடுக்க வாய்ப்பு உள்ளது. அரசு நிதி ஒதுக்கி மண் எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் தாசில்தார் உத்தரவு வந்தால் மண் எடுக்க அனுமதி அளிக்கவேண்டும். குடிமராமத்து பணிகளில் மண் கரையில் வைக்கப்படாமல் வெளியே எடுத்துசெல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு நடைபெற்றாமல் மட்டுமே தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறும்.

கடந்த ஆண்டு முறையாக நடக்காததால் இந்த ஆண்டாவது பணிகள் நடைபெற வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், தாணுபிள்ளை உள்ளிட்டோர் சேர்ந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: