வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பக்தர்கள்

*தொல்லியல் துறை அமைத்த குழாயும் பழுது

வேலூர் : வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கோயில் நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை அமைத்த குடிநீர் குழாய்கள் பழுதானதால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டைக்கு தினமும் வெளிமாநிலம், வெளிநாடு மற்றும் உள்ளூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேசமயம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதிக்காக 2 குழாய்கள் அமைக்கப்பட்டது.

 இந்த குழாய்கள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளது. அதேபோல் தொல்லியல் துறை சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக பக்தர்களை வெகுவாக கவரும் வகையில் நவீன குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த குழாயும் சில நாட்களிலேயே பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இந்நிலையில் நாடுமுழுவதும் நேற்றுமுன்தினம் மஹாசிவராத்திரி விழா சிவாலாயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் மஹா சிவராத்திரி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதற்காக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். சிவராத்திரியையொட்டி நூற்றுக்கணக்கானோர் கோயிலை 108 முறை வலம் வந்து வழிபட்டனர். அதேபோல் கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப்பிட்டு முடித்த பக்தர்கள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. பழுதான குழாய்களை திறந்து பார்த்து தண்ணீர் வராததை கண்டு அதிருப்தியுடன் கடும் அவதிக்குள்ளாயினர்.

 பின்னர் மறுபக்கத்தில் ஒரே ஒரு குழாயில் வந்த தண்ணீரை பயன்படுத்தினர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. சிலர் தண்ணீர் தாகத்துடனே அங்கிருந்து புறப்பட்டனர். தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை கோயிலில் மாதம்தோறும் பல லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியினை கோயில் நிர்வாகமும், தொல்லியல் துறையும் செய்யாமல் விட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் நிர்வாக குறைபாடுகளே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். எனவே இனியாவது உள்ளூர் முதல் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான குடிநீர் வசதியினை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பையாக காட்சியளித்த வளாகம்

மகா சிவராத்திரியையொட்டி ஆன்மிக அன்பர்கள் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் பல்வேறு விதமான அன்ன தானங்களை பிரசாதமாக வழங்கினர். அவற்றை பக்தர்களும் நீண்ட கியூவில் நின்று ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். பிரசாதம் சாப்பிட்ட பின்னர் தொன்னைகளை போட எங்கேயும் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் சாப்பிட்ட இடங்களிலேயே அவற்றை போட்டு விட்டு தண்ணீர் தேடி அலைந்தனர். குப்பை தொட்டி இல்லாமல் ஆங்காங்கே தொன்னைகளை வீசியிருந்ததால் கோயில் வளாகம் குப்பையாக காட்சியளித்தது. இதற்கும் கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

Related Stories: