காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 19 மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார விவரம் அனுப்ப உத்தரவு: தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சேலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் உள்பட 19 மாவட்டங்களில், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார, விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஆண்டுதோறும்  நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும், அந்த கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு, உபரி ஆசிரியர் மற்றும் தேவை பட்டியல் தயார் செய்யப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கு, மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரத்தை எமிஸ் இணையதளத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு, அந்த விவரங்களை அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், சேலம் உள்பட 19 மாவட்டங்களில் விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. இதனையடுத்து, இதுகுறித்த ஆய்வு கூட்டத்தில் கட்டாயம் விவரங்களை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி, 31.8.2019ம் தேதியில் உள்ளவாறு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் பணியிட நிர்ணயம் விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.  ஆனால், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், கோவை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்கள் இதுவரை அந்த விவரங்களை அனுப்பவில்லை.

எனவே, 31.8.2018ல் உள்ளபடி, ஆசிரியர்-மாணவர் பணியிட நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்கள், எமிஸ் இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயத்துடன் ஒப்பிட்டு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இதில், அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தினர், வரும் 25ம் தேதி நடக்கும் கூட்டத்திலும், பிற மாவட்டத்தினர் 26ம் தேதி நடக்கும் கூட்டத்திலும் கலந்து கொண்டு, விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: