தமிழகத்தில் 18 சார்பதிவாளர்களுக்கு சொந்த கட்டிடம்: ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 18 சார்பதிவாளர்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ₹18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளது. இதில், பெரும்பாலான அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால், இந்த அலுவலகங்களுக்கு மட்டும் வாடகையாக ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 24 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ₹24 ேகாடி செலவில் சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து 18 சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டுவதற்கு ₹18 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்தியமங்கலம், சால வாக்கம் (செங்கல்பட்டு), திருவண்ணமாலை மாவட்டம் உள்ளகடலாடி, மங்கலம், நெமிலி (அரக்கோணம்), ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, திங்களூர், விருதுநகர் மாவட்டம் வீரசோழன், அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி, சேலம் மாவட்டம் தலைவாசல், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், உள்ளிக்கோட்டை, நாச்சியார் கோயில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், தென்காசி மாவட்டம் பண்பொழி, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், உடன்குடி, தேனி மாவட்டம் கடலை மண்டு ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கவும் ஐஜி ஜோதி நிர்மலாசாமி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், கட்டப்படும் பதிவுத்துறை அலுவலகங்களை பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பணி முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க வேணடும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் பெரும்பாலானவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

* இப்போது 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட நிலத்தை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: