மகாசிவராத்திரி விழா: திருச்சியில் அகோரிகள் நள்ளிரவு யாகம்

திருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால் - மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். (ஆண் அகோரிகள் பூஜையின்போது சிவப்பு நிற லங்கோடு மட்டும் அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பார்கள். பெண் அகோரிகள் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருப்பார்கள்) நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகறது. திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை அகோரி மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த ஆண்டு அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் அகோரி கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. திருச்சி மற்றும் பிற மாவட்டம் பிற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அகோரிகள் பூஜையில் கலந்து கொண்டனர்.  அவர்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இந்த சிறப்பு யாகத்தில் அமர்ந்து மந்திரங்கள் ஜெபித்தனர். அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதி நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார். அப்போது  சக அகோரிகள் மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர். முன்னதாக அங்கு பிரதிஷ்டை செய்யபட்டுள்ள ஜெய் அகோர காளிக்கு அலங்காரம் செய்யப்பட்டும் அதே போல் ஜெய் அஷ்ட கால அகோர பைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

Related Stories: