திருவாரூரில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 122 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவாரூர்:  தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று 122 ஜோடிகளுக்கான திருமணத்தை துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் நடத்தி வைத்தனர். அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளையொட்டி மாநிலத்திலேயே முதலாவதாக திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று 122 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதையொட்டி திருவாரூர் வன்மீகபுரத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த திருமண விழா மேடை மற்றும் பந்தலில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் தலைமை வகித்தார்.

அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கோபால் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் முகமது அஸ்ரப் வரவேற்றார். இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் எம்பி மற்றும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மணமகனிடம் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்ததுடன், மணமக்களை வாழ்த்தி பேசினர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆசைமணி, எம்.எல்.ஏக்கள் பட்டுகோட்டை சேகர், மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், சீர்காழி பாரதி மற்றும் பேரவை நகர செயலாளர் கலியபெருமாள், வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இளவரசன், நகர செயலாளர் குணசேகரன், பேரவை ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்னதாக காலை 7 மணியளவிலேயே 122 ஜோடிகளுக்கான திருமாங்கல்யத்துடன் கூடிய மஞ்சள் கயிறுகள் அனைத்தும் அமைச்சர் காமராஜ், அவரது மனைவி லதாமகேஷ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியினர் சார்பில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், தேரடி விநாயகர் கோவில், பழனிஆண்டவர் கோயில் உட்பட பல்வேறு கோவில்களில் சுவாமிகளின் சன்னதிகளில் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின்னர் திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கு பின்னர் மணமக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் கட்டில், பீரோ, மெத்தை, ஃபேன், மிக்ஸி, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு மற்றும் குடும்பத்திற்கு தேவையான பாத்திரங்கள், ஜமுக்காளம் உட்பட 72 வகையான சீர்வரிசைகள் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.

Related Stories: