நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் ரன் குவிக்க முடியாமல் இந்திய அணி திணறல்: ஜேமிசன் அபார பந்துவீச்சு

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 122 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வருகிறது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் (25 வயது) அறிமுகமானார். இந்திய அணி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.

பிரித்வி ஷா 16 ரன் எடுத்து (18 பந்து, 2 பவுண்டரி) சவுத்தீ வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 11 ரன், கேப்டன் விராத் கோஹ்லி 2 ரன் மட்டுமே எடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி 17.5 ஓவரில் 40 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், மயாங்க் அகர்வால் - அஜிங்க்யா ரகானே ஜோடி பொறுமையாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. அகர்வால் 34 ரன் (84 பந்து, 5 பவுண்டரி) விளாசி, போல்ட் வேகத்தில் ஜேமிசன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 7 ரன் எடுத்து ஜேமிசன் வேகத்தில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.இந்தியா 101 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ரகானே - ரிஷப் பன்ட் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்த நிலையில், இந்திய அணி 55 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்துள்ளது. ரகானே 38 ரன், பன்ட் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன் 3, சவுத்தீ, போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: