பெண்கள் வார்டில் வெற்றி பெற்ற ஆண்: வெற்றி செல்லாது என அறிவித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை : கரூரில் பெண்கள் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண் வேட்பாளரின் வெற்றி செல்லாது என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Advertising
Advertising

ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்து மனு

கரூர் மாவட்டம் கரூர் மதுக்கரையை கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்து மனுவில்,

கரூர் மாவட்டம் சித்தளவாய் ஊராட்சியிலுள்ள 9 வார்டுகளில் 6வது வார்டு பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. நடந்து முடிந்த கிராம உள்ளாட்சி தேர்தலில் 6வது வார்டில் நானும், மற்றொருவரும் போட்டியிட்டோம். இதில் நான் வெற்றி பெற்றேன். இதன் பின்னர் நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு நான் தேர்வு செய்யப்பட்டேன்.இதற்கிடையே பிப்.6ல் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில், பெண்கள் பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் உறுப்பினர், துணை தலைவராக தேர்வானது செல்லாது என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது அரசுதான். அவர்கள்தான் முதலில் பொதுப்பிரிவு என அறிவித்திருந்தனர். அதன்படியே நான் போட்டியிட்டேன்.பெண்களுக்கான ஒதுக்கீடு வார்டு என்றால் மனுக்கள் பரிசீலனையின் போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். தேர்தல் நடத்தி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தேர்வானது செல்லாது என்ற அறிவிப்பு ஏற்புடையது அல்ல. எனது தேர்வு செல்லாது என்ற கலெக்டரின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மறு தேர்தல் நடத்தக்கூடாது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் வேட்புமனுத் தாக்கல் செய்து, பரிசீலனைக்குப் பிறகு அவர் வேட்புமனு ஏற்கப்பட்டு, வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அதுவரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெற்றிச் சான்றிதழை வழங்கி விட்டு தற்போது தடை விதித்தது ஏன்? என்றும் நீதிபதிகள் வினவினர். பின்னர் மனுதாரர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்டத் தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: