அரிமளம் அருகே கஜா புயலால் சேதமடைந்த குடிநீர் ஊரணி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

திருமயம்: அரிமளம் அருகே கஜா புயலால் சேதமடைந்த குடிநீர் ஊரணி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள பூனையன்குடியிருப்பு,உசிலம்பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்னறனர். இந்நிலையில் இக்கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள அய்யன் ஊரணியில் உள்ள தண்ணீரை 12 ஆண்டுகளுக்கு முன்னர் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக குடிநீருக்காக ஊரணியில் நீர் எடுப்பதை தவிர்த்த அப்பகுதி மக்கள் வரலாற்று மூதாதையர்கள் பயன்படுத்திய ஊரணியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்படி ஊரணியை சுற்றி கம்பி வேலிகள் அமைத்து ஊரணியின் நான்கு புறமும் சிமென்ட் சுவர்கள் எழுப்பி பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் அரிமளம் பகுதியில் கடந்த 2018ம் வருடம் வீசிய கஜா புயலில் ஊரணியின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சரிந்து சுமார் 100 மீட்டர் சேதமடைந்தது. இது அப்பகுதி மக்களை வேதனை ஆழ்த்திய நிலையில் அதனை சரி செய்ய பூனையன்குடியிறுப்பு, உசிலம்பட்டி கிராம மக்கள் நடவடிக்கை எடுத்து முயற்சி செய்தனர். இருந்த போதிலும் முழுமையாக சரி செய்ய போதுமான பொருள் வசதி இல்லாததால் புயலில் இடிந்த ஊரணியை சரி செய்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனருகே அரசு பள்ளி இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஊரணிக்குள் இறங்கும் போது அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கஜா புயலில் சேதமடைந்த அய்யன் ஊரணி சுற்று சுவரை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: