முல்லை பெரியாறு நீர்மட்டம் சரிவு அதல பாதாளத்தில் நிலத்தடிநீர் மட்டம்: தவிக்கப்போகுது தேனி மாவட்டம்

தேனி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 116 அடிக்கு கீழே வந்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றதால் வரும் கோடையில் தேனி மாவட்டம் தவிக்கப்போகிறது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 116 அடிக்கு சற்று கீழ் உள்ளது. இன்னும் ஒரு மாதம் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தேனி மாவட்டத்திற்கு எடுக்க முடியும். ஆக தற்போதய சூழ்நிலையில் மொத்தம் அணையில் உள்ள 12 அடி நீரை மட்டுமே பயன்படுத்தி மீதம் உள்ள நெல் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக ஆயிரம் அடி முதல் ஆயிரத்து 200 அடிக்கும் கீழே சென்று விட்டது. உள்ளாட்சிகளில் நிலத்தடி நீரை நம்பி குடிநீர் விநியோகம் செய்ய முடியாது. மாவட்டத்தில் 70 சதவீதம்் உள்ளாட்சிகள் முல்லை பெரியாறு அணை நீரை மட்டுமே நம்பி உள்ளன. முல்லை பெரியாறு அணையில் தற்போது உள்ள நீர் வரும் ஜூலை மாதம் வரை போதாது. எனவே உள்ளாட்சிகள் குடிநீர் பிரச்னையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையில் உள்ளன. மற்றொரு தலைவலியாக வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் குடிநீர் பிரச்னை மிகவும் உச்சத்தில் இருக்கும். கோடை மழை பெய்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது.

இதனால் உள்ளாட்சிகள் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை எப்படி சமாளிப்பது என திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எப்படி இருந்தாலும், எவ்வளவு பணம் செலவிட்டாலும் முறையற்ற நீர் நிர்வாகம் காரணமாக தேனி மாவட்டத்தில் வரும் கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை சமாளிப்பது சிரமம் என்று உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: