வாரணாசி - இந்தூர் இடையே இரவு தனியார் ரயில் தொடக்கம்: ஒரு படுக்கையை கடவுள் சிவனுக்கு ஒதுக்க ரயில்வே முடிவு

வாரணாசி: வாரணாசி - இந்தூர் இடையே இயக்கப்படும் காசி - மஹாகல் விரைவு ரயிலில் ஒரு படுக்கையை கடவுளான சிவனுக்கு ஒதுக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது வாரணாசி மக்களவை தொகுதியில் ரூ.1,254 கோடி மதிப்பிலான 50 நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக ஐஆர்சிடிசி.யின் ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்’ ரயிலை காணொளி காட்சி மூலம் வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இரவு நேரத்தில் இயங்கும் முதல் தனியார் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெயின் மற்றும் ஓம்கரேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்க புனித தலங்களை இந்த ரயில் இணைக்கிறது.

இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட காசி - மஹாகல் விரைவு ரயிலில் குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பெட்டியான பி5-இல் உள்ள 64-ஆம் எண் படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த படுக்கையை சிவனுக்கு ஒதுக்க இருப்பதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மூன்று ஜோதிர்லிங்க கோயில்களை இணைக்கும் வகையில் விடப்படும் இந்த ரயிலில் சைவ உணவு மட்டுமே விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: