3 நகை கடை கொள்ளையில் துப்பு கிடைக்காமல் திணறும் காவல்துறை: குமரியில் தொடரும் கொள்ளை, செயின் பறிப்புகள்: அச்சத்தில் மாவட்ட பொதுமக்கள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நகை கடை கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் பீதி அடைய செய்துள்ளன. இந்த கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்க முடியாமல் காவல்துறை திணறி வருவது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மக்கள் அடர்த்தி நிறைந்த மாவட்டங்களில், குமரி மாவட்டமும் ஒன்று. இங்குள்ள மக்களிடம் அதிகளவில் பணப்புழக்கம் காணப்படும். குறிப்பாக இங்குள்ள பெண்களிடம், அதிகளவில் நகை அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக திருமணங்களுக்கு இங்கு அதிகளவில் நகைகள் கொடுக்கும் நடைமுறை உள்ளது. இதனால் சிறிய மாவட்டமாக இருந்தாலும் கூட, நகை கடைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.  மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. இதே போல் தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் ஏராளமான நகை கடைகள் உள்ளன. சமீப காலமாக இங்கு நகை கடைகளை குறி வைத்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 நகை கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்த பொன் விஜய் (40) என்பவரின் நகை கடையை உடைத்து சுமார் 150 நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பொன் விஜய், வீட்டுக்குள் மாடி வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த நகை கடை சாவியை எடுத்து வந்து, நகை கடையை திறந்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கடை முன் தூங்குவது போல் படுத்திருந்து,  லாவகமாக ஷட்டரை திறந்து, உருண்டு கடைக்குள் சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு பின், அதே போல் உருண்டு கடைக்கு வெளியே வந்து ஷட்டரை பூட்டி விட்டு செல்லும் காட்சிகள் இருந்தன. இவ்வளவு லாவகமாக, நகை கடைக்குள் நடந்த கொள்ளை சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஏற்கனவே இந்த கொள்ளை சம்பவத்துக்கு முன், மார்த்தாண்டத்தில் மற்றொரு நகை கடையில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த வித துப்பும் கிடைக்காமல் காவல்துறை மவுனமாக இருந்த நிலையில் தான், பொன் விஜய் வீட்டுக்குள் நுழைந்து சாவியை எடுத்து வந்து நகை கடையில் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை  சம்பவத்துக்கு பின் உஷாரான போலீசார் கொள்ளையில் துப்பு துலங்கும் வகையில் விசாரணையில் இறங்கினர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வந்த வேளையில் நகை கடை கொள்ளையர்கள் மறுபுறம் கைவரிசை காட்ட தொடங்கினர். மார்த்தாண்டத்தில் கொள்ளை நடந்த ஒரு வாரத்தில், திருவட்டார்  அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பூவன்கோடு பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர். இந்த நகைக்கடை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டும் இருந்தது. 3 நகை கடைகளில் இவ்வாறு அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த வேளையில், மறுபுறம் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்தன.

நாகர்கோவில், குலசேகரம், திருவட்டார், கருங்கல், அருமனை, களியக்காவிளை என மாவட்டம் முழுவதும் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. சாலையில் நடந்து சென்ற பெண்களை மட்டுமல்லாமல், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களையும் வழி மறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. கடையில் தனியாக இருக்கும் வயதான பெண்களிடமும் செயின் பறிப்புகள் நடந்தன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள், பின்னர் வரிசையாக அடுத்தடுத்து நடக்க தொடங்கின. ஹெல்மெட் அணிந்தும், முகமூடி அணிந்து வந்தும் கைவரிசை காட்டுவது  தொடர் கதையாக இருக்கின்றன. காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்வதுடன், கிடப்பில் போடப்பட்டு வருகிறது. திருட்டு வழக்குகளில் கிடைக்கும் தடயங்களை மையமாக வைத்து, விசாரணையை அடுத்த கட்டத்துக்கு காவல்துறையால் கொண்டு செல்ல முடிய வில்லை. ஆங்காங்கே சிசிடிவி காட்சிகளில் சிக்கும் நபர்களை கூட அடையாளம் காண்பதில் காவல்துறை திணறி வருகிறது.

அறிவியலின் வளர்ச்சி அந்தளவுக்கு இல்லாத கால கட்டங்களில் கூட, திறமையான துப்பறியும் திறன் மூலம், கொள்ளையர்களை கண்டுபிடித்த காவல்துறையால், இப்போது நவீன யுகத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண முடிய வில்லை. கொள்ளை வழக்குகள் என்றாலே கிடப்பில் கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நகை கடைகளையும், பெண்களையும் குறி வைத்து தொடர்ச்சியாக கைவரிசை காட்டும் கொள்ளையர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் போலீசார் பெரும் அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. காக்கிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு, தொடர்ந்து செயின் பறிப்புகளும், திருட்டுகளும் அரங்கேறும் மாவட்டமாக குமரி மாவட்டம் மாறி உள்ளது. பல நகரங்களில் செயின் பறிப்புகளில் கொலைகளும் நடந்துள்ளன. குமரி மாவட்டமும் அதுபோன்ற கொலைகளை கண்டு இருக்கிறது.

ஆதாய கொலைகள் அரங்கேறிய  மாவட்டம் குமரி மாவட்டம் . இப்போது நடந்துள்ள பல  செயின் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் மயிரிழையில் தான் உயிர் தப்பி இருக்கிறார்கள். எனவே காவல்துறை விழித்து கொள்ள வேண்டும். காவல் நிலையங்களில் முடங்காமல், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். துப்பறியும் திறனை இழந்து விடாமல், அதன் மூலம் பொதுமக்களின் பொருட்களையும், நகைகளையும் மீட்டு கொடுக்க வேண்டும் என்பது சாமான்யனின் கோரிக்கை ஆகும்.

கொள்ளை சம்பவங்களில்துப்பு கிடைத்துள்ளது

இது குறித்து எஸ்.பி. ஸ்ரீநாத் கூறுகையில், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் வந்த பின், க்ரைம் ரேட் குறைந்து உள்ளது. ஒரு சில கிராமப்புற பகுதிகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். நகை கடை கொள்ளை சம்பவங்களை பொறுத்தவரை முக்கிய தடயம் கிடைத்துள்ளது. தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியிருப்பு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க அறிவுறுத்தி உள்ளோம். நகை கடைகள் மற்றும் முக்கிய வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன், அபாய அலாரம் பொருத்தும் சிஸ்டமும் இருக்கிறது. இது பற்றியும் அறிவுறுத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை வழக்குகள் முடிவுக்கு வரும் என்றார்.

போலீசுக்கு ஒத்துழைப்பு இல்லை

தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறுகையில், முன்பு போல் சந்தேகப்படும் நபர்களை வைத்து விசாரிக்க முடியாது. ஒருவரை குற்றவாளி என பிடித்த  மறுநாள் கைது காட்டி, சிறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் முன்பு  அப்படி அல்ல, சந்தேகப்படும் நபரிடம் முறைப்படி விசாரித்து 10 நாட்கள், 15 நாட்கள் வரை விசாரித்து  திருட்டு கும்பலை கண்டுபிடிப்பார்கள். எந்த குற்றவாளியும் போலீசார் பிடித்ததும் குற்றங்களை ஒப்புக் கொள்ள மாட்டான். விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டும். ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறி விட்டது. தனிப்படை போலீசாருக்கு உள்ளூர் போலீஸ் நிலையங்களிலேயே ஒத்துழைப்பு இல்லை. அதிகாரிகளும் தனிப்படையினரை தொடர்பு கொள்வதில்லை. பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், க்ரைம் பிரிவில் இருந்தே போலீசார் ஓட்டம் பிடிக்கிறார்கள் என்றனர்.

ரோந்து பணி இல்லை ஓய்வு பெற்ற காவல்துறை  சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

காவல்துறையின் மிக முக்கியமான பணியே ரோந்து பணி தான். ஆனால் இப்போது ரோந்து பணி என்பது இல்லை. சாலையில் பகல் வேளையிலும் சரி, இரவு நேரங்களிலும் சரி போலீசாரை பார்க்க முடிவதில்லை. இன்ஸ்பெக்டர்களும், எஸ்.ஐ.க்களும் காவல் நிலையங்களில் முடங்கி கிடக்கிறார்கள். வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடித்து வந்த காலம் எல்லாம் மலை ஏறி போச்சு. உள்ளூரை விட்டு போலீசார் வெளியே செல்வதில்லை. பல இன்ஸ்பெக்டர்கள், பெட்டிஷன் விசாரித்து லாபம் பார்க்கும் நிலை தான் உள்ளது.  போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். காலை மற்றும் மாலை, இரவு என போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டாலே கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியும். முன்பெல்லாம் முக்கிய பகுதிகளில் பீட் நோட் இருக்கும். ரோந்து செல்லும் போலீசார் அந்த பகுதியில் பீட் நோட்டில் கையெழுத்திட்டு வருவார். எஸ்.பி. அல்லது டி.எஸ்.பி. ஆய்வுக்கு செல்லும் அதை கண்காணிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. ரோந்து பணி இல்லாமல் தான், முக்கிய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும், செல்போன் கடைகளிலும் கொள்ளையடித்து செல்கிறார்கள். இவ்வாறு கூறினர்.

Related Stories: