கத்திமுனையில் பெண்ணை மிரட்டி செல்போன் பறித்த தம்பதி கைது

சென்னை: புளியந்தோப்பு எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்த கவுரி (28), கடந்த 13ம் தேதி இரவு வடக்கு கடற்கரை, ராஜாஜி சாலையில் நடந்து சென்றபோது, இவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, செல்போனை பறித்து சென்ற கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் 3வது தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (எ) மண்ணய்யா (40) மற்றும் அவரது மனைவி பிரியங்கா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் பல இடங்களில் இதுபோல் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவர்களிடமிருந்து 4 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* திருமுல்லைவாயலை சேர்ந்த விஜய் (20) என்பவர், கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றபோது, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் கிஷோர் பாலாஜி (23) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

* மதுரவாயல், கோயம்பேடு, நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம் மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த பிராபகரன் (எ) தக்காளி பிரபா (24), ஞானபிரகாசம் (25), சிவா (25), அருண் (எ) கில்லி அருண் (26) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

* கொளத்தூர் பூம்புகார் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ரகு என்பவரின் வீட்டு பால்கனி வழியாக உள்ளே புகுந்து செல்போன் திருட முயன்ற, கொளத்தூர் கண்ணகிநகர் சர்ச் தெருவை சேர்ந்த ஏழுமலை (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசை பகுதியில் கஞ்சா விற்ற, அதே பகுதியை சேர்ந்த சீனு (எ) அன்டா சீனிவாசன் (23) மற்றும் ராயப்பேட்டை இஸ்மாயில் கிரவுண்ட் பகுதியை சேர்ந்த அருண் (எ) கோழிபாடி அருண் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* பீர்க்கன்காரணையில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிய குரோம்பேட்டை சிஎல்சி லைன், 5வது குறுக்கு தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (29) என்பவரை கடந்த 11ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

 இதில் தொடர்புடைய ஆனஸ்ட்ராஜின் தம்பி ஜோதி பாஸ் (25) என்பவரை நேற்று கைது செய்தனர்.

10 சவரன் கொள்ளை

நங்கநல்லூர் கன்னிகா காலனியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகனுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனால், இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் உறவினர் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு எல்இடி டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Related Stories: