சந்திரபாபு நாயுடு உதவியாளர் வீடு, நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 2000 கோடி பணம் சிக்கியது : பெயரை குறிப்பிடாமல் பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2000 கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் 3 தலைநகரம் அமைக்கும் விவகாரத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு, கம்பெனிகளில் கடந்த வாரம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாமல், ரெய்டு மற்றும் அதில் கண்டறியப்பட்ட தகவல் குறித்து கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 6ம் தேதி ஐதராபாத், விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முக்கிய பிரமுகரின் முன்னாள் உதவியாளர் உள்ளிட்ட பலரது வீடு, கம்பெனிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், போலி துணை ஒப்பந்ததாரர்கள் மூலமாக போலி பில் தயாரித்து, போலி நிறுவனங்கள் வாயிலாக பல கோடி மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளன. இமெயில்கள், வாட்ஸ்அப் மெசேஜ்களும் கிடைத்துள்ளன.

சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முதல் கட்ட சோதனையில் ரூ.2000 கோடிக்கும் மேலாக பண பரிவர்த்தனைகள், போலியான பில்கள் மூலமாக காட்டப்பட்டுள்ளன. போலியான நிறுவனங்கள் பல செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. கணக்கு காட்டாத ரூ. 85 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.71 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: