ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினரிடையே பயம் போய் விட்டது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதங்கம்

சீர்காழி: ‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியினரிடையே பயம் இல்லாமல் போய்விட்டது’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதங்கப்பட்டார். நாகை  மாவட்டம்  சீர்காழியில் நகர, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அதிமுக  செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி எம்எல்ஏ  பாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலம் என ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில்  இதுதான் முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம். எனவே அரசாணை வருகிற  நேரத்தில் பாதிப்புகள் இல்லாத வகையில், மத்திய அரசு ஏற்றுக்கொள்கிற வகையில்  சட்டம் இருக்க வேண்டும் என சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து முடிவு  எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா செயல்படுத்திய எல்லா  திட்டத்தையும் அரசு  முழுமையாக வழங்கி கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா  மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். மீத்தேன்,  ஹைட்ரோகார்பன், குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பல காரணங்களால் நாம்  வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் என சிலா் கூறுகிறார்கள். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் ஒருபோதும்  அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதிப்பட கூறியுள்ளார். ஜெயலலிதா  மறைவுக்கு பின்பு அதிமுகவினரிடையே பயம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல்  எல்லாம் சரியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: