உலக நாடுகளில் அதிக வரவேற்பு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடைகளுக்கு மாற வலியுறுத்தல்

திருப்பூர்: உலக நாடுகளில் பாலிஸ்டர் ஆடைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் துணி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் பங்கு ரூ.26 ஆயிரம் கோடியாக உள்ளது.

நமது நாட்டின் போட்டி நாடுகளான வியட்நாம், பங்களாதேஷ், கம்போடியா, சீனா ஆகிய நாடுகள் பி்ன்னலாடை உற்பத்தியின் முன்னிலையில் உள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகள் பாலிஸ்டர், காட்டன் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதிக ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளனர். இந்தியாவில் காட்டன் அதிகளவு உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது பாலிஸ்டர் ஆடைகளுக்கு உலக நாடுகளிலேயே நல்ல வரவேற்பு உள்ளது.  

இதனால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும். பாலிஸ்டர் ஆடை தயாரிப்பில் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து அதிகளவு தைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். வியட்நாம், பங்களாதேஷ், கம்போடியா ஆகிய நாடுகள் ஒரு சில நாடுகளுடன் வரியில்லாத ஒப்பந்தங்களை ஏற்படுத்தி அதிகளவு  ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோன்று இந்தியாவும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தங்களை ஏற்படுத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 47வது இந்திய சர்வதேச ஜவுளிக்கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை  திருப்பூர் பழங்கரை ஐ.கே.எப். கண்காட்சி மையத்தில் நடக்கிறது. இதில், இந்தியாவில் உள்ள முன்னணி பின்னலாடை  உற்பத்தியாளர்கள் தங்களுடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் குளிர், கோடை கால ஆடைகள், டி-சர்ட், பெண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், மருத்துவ ஆடைகள், இயற்கை ஆடைகள் என பல்வேறு ஆடைகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யு.கே., அமேரிக்கா, கனடா, தென் ஆப்பிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச்சார்ந்த பையர்கள் அதிகளவு வர உள்ளனர். பின்னலாடை உற்பத்தியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க ஆண்டுக்கு இரு முறை இதுபோன்ற  கண்காட்சிகளை ஏஇபிசி நடத்துகிறது. இந்த அரிய வாய்ப்பை பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்பு ஆடைகளை காட்சிப்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தை சார்ந்த அலுவலர்கள் வசந்தகுமார், ஈஸ்வரசுந்தர், சங்கர்  ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: