கும்பகோணம் அருகே கொள்முதல் நிலையத்தில் முறைகேடு விவசாயிகள் மறியல் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள மணிக்குடி, இளங்காநல்லூர், கீரங்குடி, வஞ்சனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, மணிக்குடி கிராமத்தில் திறக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில் விவசாயிகளை கொண்டு வந்து நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல், வியாபாரிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை, இரவு நேரத்தில் கொள்முதல் செய்ததால் 10 நாட்களாக கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள், பனி, வெயிலில் காத்துக்கிடந்து பாதிப்படைந்தனர். மேலும், பல நாட்களுக்கு பிறகு நெல்மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளில் நெல் மூட்டைக்கு, சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ வரை கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டும், மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் கேட்டனர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொள்முதல் நிலைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை விவசாயிகள் கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: