விமான நிலையங்களை போல் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு மக்களிடம் கட்டணம் வசூல்: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: விமான நிலையங்களில் பயணிகள் செலுத்தும் வரியில் மேம்பாட்டு கட்டணமும் (யுடிஎப்) இடம் பெறுகிறது. பல விமான நிலையங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், புதிய மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: அமிர்தசரஸ், நாக்பூர், குவாலியர் மற்றும் சமர்பதி ரயில் நிலையங்களை ரூ.1,296 கோடியில் மேம்படுத்த ரயில்வே முடிவு செய்து, அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.

இதேபோல் 50 ரயில் நிலையங்களை, இந்திய ரயில்வே நிலைய மறுமேம்பாட்டு வாரியம் (ஐஆர்எஸ்டிசி) மூலம் ரூ.50 ஆயிரம் கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வசூலிக்கப்படுவது போல் ரயில் பயணிகளிடமும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இது, ரயில் நிலையங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இது நியாயமான கட்டணமாக இருக்கும். இந்த வரி பயணிகள் கட்டணத்துடன் சேர்க்கப்படும். உலகத் தரத்திலான வசதியை ரயில் நிலையங்களில் அனுபவிக்கும் பயணிகளுக்கு இது பெரிய விஷயமாக இருக்காது என்றார்.

Related Stories: