குளித்தலை கடம்பர் கோயில் எதிரே ஆங்கிலேயர் கால பழமையான பாலம் பொலிவு பெறுமா?: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

குளித்தலை: குளித்தலை கடம்பர் கோயில் எதிரே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1926ம் ஆண்டு தென்கரை வாய்க்காலில் சிறிய பாலம் கட்டப்பட்டு இருந்தது. சில வருடங்களுக்கு முன் குளித்தலை-முசிறி பெரியார் பாலம் கட்டுமான பணி நடைபெற்றபோது இந்த பழமையான பாலத்தின் வழியாக தான் அனைத்து பொருட்களும் எடுத்துச்சென்று பாலம் கட்டப்பட்டது.சமீபத்தில் திருச்சி-கரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் திண்டுக்கல், மதுரை, மணப்பாறை, கடவூர், தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, தோகமலை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வரும் வாகனங்கள் புறவழிச்சாலை செல்ல வேண்டுமென்றால், இந்த கடம்பூர் கோவில் வழியாக செல்லும் தென்கரை வாய்க்கால் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. மேலும், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இவ்வழியாகதான் வந்து செல்கின்றனர். மேலும் திருச்சி மற்றும் கரூரிலிருந்து வரும் வாகனங்கள் குளித்தலை வழியாக வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த பாலத்தைதான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அதனால் தினந்தோறும் இப்பாலத்தின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்நிலையில் 1926ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பதால், தற்போது பாலத்தின் மேல்பகுதி இருபுறம் உள்ள கட்டைகள் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. மேலும் பாலம் அடிக்கடி பழுதடைந்த நிலையில் அவ்வப்போது சிறிய பழுதுகளை ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் இந்த தென்கரை வாய்க்கால் பாலத்தை கடந்து தான் சென்றனர். அப்போது பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சேதமடைந்து கிடந்ததால், தேக்கு குச்சிகளை வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர். தைப்பூசத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த தேக்கு குச்சிகள் தற்போது அகற்றப்பட்டது. அதனால் வாகனங்களினால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கடம்பர் கோவில் எதிரே செல்லும் தென்கரை புதிய பாலம் கட்டவோ அல்லது தற்காலிகமாக பழுதடைந்த நிலையை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: