2006 முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த விபத்துகளில் தமிழகம் முழுவதும் 668 மின் ஊழியர்கள் பலி...6,379 பேரும், 1318 விலங்குகளும் உயிரிழப்பு

சென்னை: பல்வேறு காரணங்களால் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த விபத்துக்களில் சிக்கி, தமிழகம் முழுவதும் 668 மின்வாரிய  ஊழியர்கள்  பலியாகியுள்ளனர். மேலும் 6,379 பொது மக்களும், 1,318 விலங்குகளும் உயிரிழந்துள்ளனர். எனவே இதைத்தடுக்கும் வகையில் துரித  நடவடிக்கைகளில்  மின்வாரியம் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் வீடு மின்இணைப்புகள்-2 கோடி, வணிகம்-35 லட்சம்,  தொழிற்சாலைகள்- 7 லட்சம், விவசாயம்-21 லட்சம் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான  இணைப்புகள் உள்ளன. நாள்தோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ்  இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறுள்ள இணைப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்கிறது. மின் வழித்தடங்கள்   மூலமாக மின்சாரம் துணைமின்நிலையங்களுக்கு கொண்டுவரப்படும். இங்கிருந்து வீடு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டுசெல்லப்படும். இதற்காக ஏராளமான  மின்கம்பங்கள், பெட்டிகள், வயர்கள், டிரான்ஸ்பார்மர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அவை  வெப்பமாக இருக்கும். எனவே  குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை பராமரிப்புப்பணி மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பராமரிப்புப்பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் முறையாக இப்பணி நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு வாரியத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  காலிப்பணியிடங்கள் இருப்பதும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஆண்டுதோறும் மின்வாரிய ஊழியர்கள் பலர்  இறப்பதும், உடல் உறுப்புகளைஇழப்பதும் நடக்கிறது. இதில் பொதுமக்களும், விலங்குகளும் தப்பித்துவிடவில்லை. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு  வரை 668 மின்வாரிய ஊழியர்கள் இறந்துள்ளனர். இதில் சாலைவிபத்தில் இறந்தவர்களும் அடங்குவர். இதேபோல் 6,379 மனிதர்களும், 1,318 விலங்குகளும்  உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாதி  அலுவலகங்களில் மிகவும் குறைவாக ஊழியர்களே பணியாற்றுகின்றனர். குறிப்பாக களப்பணியில் அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன. இதனால்  அலுவலர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் மின்கடத்தி உள்ளிட்ட சாதனங்கள் குறைவான தரம் கொண்டவை பயன்படுத்தப்படுகிறது. இதனால்   அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்பெட்டிகளும் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதை  சரிசெய்யும் பணியில் ஈடுபடும்போதும் விபத்து ஏற்படுகிறது. மேலும் மழைபெய்யும் போது பராமரிப்பில்லாத மின்சாதனங்களுக்கு அருகில் செல்லும்  போது  பொதுமக்கள், விலங்குகள் பலியாகும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை  சந்தித்துள்ளது.

எனவே அனைத்து டிரான்ஸ்பார்கள், கம்பங்களின் மின்சாரம் இருக்கும்போது ஒளிரும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும். அப்போது மின்வாரிய ஊழியர்கள்   மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக விளக்குகளை பார்த்துவிடுவார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு உயிரிழப்பு குறைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே   மின்வாரியம் மின்விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: