சூரியனின் துருவங்களை படம்பிடிக்க புறப்பட்டது அமெரிக்க விண்கலம்: நாசா-ஐரோப்பிய ஏஜென்சி கூட்டு முயற்சி

வாஷிங்டன்: சூரியனின் துருவங்களை படம் பிடித்து ஆய்வு செய்வதற்காக, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் இணைந்து விண்கலம் ஒன்றை, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பியது. சூரியனின் துருவங்களை படம் பிடிப்பதற்காக விண்கலம் ஒன்று அலயன்ஸ் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து நேற்று அனுப்பப்பட்டது. இந்த ஆய்வை அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் இணைந்து மேற்கொள்கிறது. விண்ணுக்கு சென்ற சூரிய விண்கலத்தின் சோலார் தகடுகள் விரிவடைந்ததற்கான சிக்னல்கள் ஜெர்மனியில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைத்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் 2 நாட்களுக்கு சூரிய விண்கலம் தனது கருவிகள் மற்றும் ஆன்டனாக்களை விரிவடைச் செய்யும். முதல் 3 மாதங்களுக்கு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 10 முக்கிய கருவிகள் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என பரிசோதிக்கப்படும். சூரிய விண்கலம் தனது இலக்கு சுற்றுவட்டபாதையை சென்றடைய 2 ஆண்டுகள் ஆகும். இந்த விண்கலம் 2 முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன. இதில் உள்ள சில கருவிகள் விண்கலத்தை சுற்றி நிலவும் எலக்ட்ரிக் மற்றும் மின்காந்த சூழல்கள், கடந்து செல்லும் துகள்கள், அலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தகவல் அனுப்பும். விண்கலத்தில் உள்ள தொலை உணர்வு கருவிகள் சூரியனை தொலைவிலிருந்து படம் பிடித்து தகவல்கள் அனுப்பும்.

இது சூரியனின் உள் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள உதவும். சூரிய விண்கல திட்டத்தின் ஆய்வுகள் அடுத்தாண்டு நவம்பர் வரை நீடிக்கும். இதற்கு முன் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியும் இணைந்து யுலிசஸ் என்ற விண்கல ஆய்வை மேற்கொண்டது. இது சூரியனை சுற்றியுள்ள விண்வெளிப் பகுதியை, விஞ்ஞானிகள் முதன் முதலில் அளவிட உதவியது. தற்போது அனுப்பட்டுள்ள சூரிய விண்கலத்தில் கேமிராக்கள் உள்ளதால், அது சூரியனின் துருவ பகுதியை முதன் முதலாக படம் பிடித்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: