தருமபுரி அருகே எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் அருகே உள்ள மலை கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக, பலமுறை அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில், ஏரிமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 கிலோமீட்டர் அடியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் குன்றும் இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ராகி, கடுகு, நிலக்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டு அதன் மூலம் சிறிதளவு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இப்பகுதியில் சாலை, மின்சாரம், மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், பிரசவ காலத்தில் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து விட்டு, பின்னர் தேர்தல் முடிந்ததும் நீங்கள் யார்? என கேள்வி கேட்பதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ஏரிமலை கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமென திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும், ஏரிமலை கிராம மக்களுக்காக மாற்று இடம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அங்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: