போட்டியை வென்றபின் துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றது வருத்தமளிக்கிறது: வங்கதேச யு-19 கேப்டன்!

பாட்செப்ஸ்ட்ரூம்: உலகக்கோப்பை வென்ற பின்பு துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றது வருத்தமளிக்கிறது என வங்கதேச ஜூனியர் அணியின் கேப்டன் அக்பர் அலி கூறியுள்ளார். 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த மாதம் 17-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியனாகி சரித்திரம் படைத்தது. இப்போட்டி முடிந்த பின்பு மைதானத்திற்குள் புகுந்த வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டனர்.

இதனால் இந்திய-வங்கதேச வீரர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரே, இந்திய வீரர்களை உடனடியாக பெவிலியனுக்கு வர சொன்னார். இதனால் வீரர்களிடையிலான மோதல் தவிர்க்கப்பட்டது. இநநிலையில், கோப்பையை வென்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி, எங்களுடைய பவுலர்கள் சிலர் ஆக்ரோஷமாக இருந்தனர். அதனால் துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றது வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் இந்திய அணியை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். கோப்பையை வென்றது கனவு நிஜமான தருணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்தோம் அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. இது எங்களுக்கு வெறும் முதல் வெற்றி படிக்கட்டு தான் என கூறியுள்ளார்.

Related Stories: