திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் ரத்து: தேவஸ்தானம் முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 4 லட்டுகள் 70க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் முதல் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகளை முற்றிலும் ரத்து செய்த தேவஸ்தான நிர்வாகம், சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கி, கூடுதல் லட்டுகள் வேண்டுமென்றால் ஒரு லட்டு 50க்கு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு அதிரடி முடிவை  தேவஸ்தானம் நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, வாராந்திர மற்றும் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தற்போது வாராந்திர சேவையில் விசேஷ பூஜையில் 1 பெரிய லட்டு, வடையும்,  அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் 2 பெரிய லட்டு, 2 வடை,  சகஸ்கர கலசாபிஷேகத்தில் 1 பெரிய லட்டு, வடை, 2 அப்பம், திருப்பாவாடா சேவையில்  வடை, ஜிலேபி, முறுக்கு, வஸ்திரம், அபிஷேக சேவையில் 2 லட்டு, 2 வஸ்திரம், நிஜபாத தரிசனத்தில் 2 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல், நித்திய சேவைகளான தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்வம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையில்  2 சிறிய லட்டுகளும், கல்யாண உற்சவத்தில் 2 பெரிய லட்டுகள், 2 வடை மற்றும் 5 சிறிய லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சேவைகளில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு சிறிய லட்டு இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்களை முற்றிலும் ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரசாதங்கள் தேவைப்பட்டால் பணம் கொடுத்து வாங்கும் விதமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். மே மாதத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இந்த கட்டுப்பாடு அமலாக உள்ளது.

Related Stories: