ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு...கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

சின்னாளபட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் நிலவும் அபாயம் நிலவுகிறது.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே காமராஜர் நீர்தேக்கம் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 23.5 அடியாகும். மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில் இந்த நீர்தேக்கம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர்,  பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த நீர்தேக்கத்திற்கு வந்து சேர்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த நீர்தேக்கம் விளங்குகிறது. தற்போது இந்த நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து இல்லாததால்,  நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இதன் நீர்மட்டம் 11.5 அடியாக இருந்தது. இதனால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: