ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் புதிய பாலம்

மதுரை: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சித்திரை திருவிழா காலத்திற்குள் முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை அழகர்கோயில் திருவிழா வருடம்தோறும் சித்திரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு மலையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் உள்ள 420 மண்டகப்படிகளில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்குவர். இந்நிகழ்ச்சியை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவர். வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடக்கும் போது வைகை அணையில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடமான ஏவி மேம்பாலம் மதிச்சியம் வடகரை அருகே வருடம்தோறும் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வந்தனர். இந்த பாலம் திருவிழா முடிந்தவுடன், வைகையில் தண்ணீர் வரும் போது, சேதமடைந்து விடும்.

இதனால் நிரந்த பாலம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க அரசு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகளை வரும் சித்திரை திருவிழா காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறும்போது, ‘மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பஸ் ஸ்டாண்டை மேம்படுத்த ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.81.41 கோடியில் வைகை ஆற்றில் தடுப்பு அணைகள், தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் நவீன முறையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகில் நவீன பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் சித்திரை திருவிழா காலத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்க்கிங், சித்திரை வீதிகளில் புதிய கற்கள் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளை விைரந்து முடிக்க துரிதப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: