தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட முகாம் நிறைவு : துணை முதல்வர் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: சென்னை அடையாறு நேரு யுவகேந்திரா இளைஞர் விடுதி அரங்கத்தில், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட முகாம் நிறைவு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று, கலந்துகொண்டு சிறந்த பழங்குடியின இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.  பின்னர் அவர் பேசுகையில், ‘‘ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் புறக்கணிக்க முடியாததும், தவிர்க்க இயலாததும் ஆக விளங்குவதும் இளைஞர் சக்திதான். இளைஞர்களை புறந்தள்ளும் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் கண்டதாகவோ, எழுச்சி பெற்றதாகவோ, இதுவரை சரித்திரமே கிடையாது.

மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் பழங்குடியின இளைஞர்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். தீயசக்திகளின் தூண்டுதல்களுக்கு ஆளாகி, தவறான பாதையில் சென்றுவிடக்கூடாது’’ என்றார். நிகழ்ச்சியில் சென்னை மத்திய ஆயுதப்படை காவல்துறை துணைத்தலைவர் சோனல் வி மிஸ்ரா, நேரு யுவகேந்திரா தமிழகம் மற்றும் புதுவை மாநில இயக்குநர் எம்.என்.நடராஜ், சென்னை நேரு யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், மதுரை நேரு யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர், சுக்மா, பஸ்தார், தந்தேவாடா ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பழங்குடியின இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: