ராமஜென்ம பூமி நியாஸ் தலைவர் எதிர்ப்பால் பரபரப்பு: ராமர் கோயில் அறக்கட்டளையில் ஆர்எஸ்எஸ்.விஎச்பி புறக்கணிப்பு: மத்திய அரசு சமாதான முயற்சி

புதுடெல்லி: ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளையில் ஆர்எஸ்எஸ், விஎச்பி தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு ராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிரித்யா கோபால் தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளையை பிரதமர் மோடி அமைத்துள்ளார். இதன் தலைவராக தன்னை அவர் நியமிப்பார் என ராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிரித்யா கோபால் தாஸ் கருதினார். ஆனால், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் தலைமையில் அறக்கட்டளை நியமிக்கப்பட்டது. இதனால், கோபால் தாஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும், ராமர் கோயிலுக்காக பல ஆண்டுகளாக போராடியும், முயற்சிகளையும் செய்து வந்த ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த அறக்கட்டளையில் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ள அவர், மத்திய அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், கோயில் கட்டுவதற்கான பணியை அறக்கட்டளை தொடங்க உள்ள நிலையில், கோபால் தாசின் இந்த எதிர்ப்பால் மத்திய அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்த மத்திய அரசும், உபி மாநில அரசும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக, அயோத்தி எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா தலைமையில் அரசு 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. நேற்று 2 முறை சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த அவர்களை கோபால் தாஸ் தரப்பினர் தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாக கூறியும் அவர் ஏற்கவில்லை. இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மசூதி இடிபாடுகளை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு? அயோத்தியில் கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட அறக்கட்டளையை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கிடையே,  ராமர் கோயில் கட்டுவதற்கு முன்பாக, அங்குள்ள பாபர் மசூதி இடிபாடுகளை எடுத்து பாதுகாக்க, முஸ்லிம் தரப்புகள் விரும்புகின்றன.  இந்நிலையில், பாபர் மசூதி நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜபர்யாப் ஜிலானி நேற்று அளித்த பேட்டியில், ‘‘சட்டப்படி, பாபர் மசூதி இடிபாடுகளுக்கு உரிமை கோர வேண்டுமென வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்த வாரம் டெல்லியில் எங்கள் செயற்குழு கூடி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம்,’’ என்றார். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பாபர் மசூதி பிரிவு தலைவர் இயாசும் இதை கருத்தை கூறி உள்ளார். பாபர் மசூதி இடிபாடுகளை எளிதில் அப்புறப்படுத்தி கொண்டு வருவதற்கான நிலம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: