வுகானில் வைரஸ் பரவுவதை முதலில் கண்டுபிடித்து கூறிய கொரோனா கதாநாயகன் டாக்டர் லீ பரிதாப சாவு: சீன மக்கள் கடும் கொந்தளிப்பு: விசாரணை நடத்த அரசு உத்தரவு

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்த  டாக்டர் லீ வென்லியாங் (34), கொரோனா வைரஸ் தாக்கி இறந்தார். இது மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால், இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்தாண்டு டிசம்பர் மாதமே பரவத் தொடங்கியது. இங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் கண் டாக்டர் லீ வென்லியாங் (34) உட்பட 8 டாக்டர்கள், ‘சார்ஸ்’ போன்ற கொடிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதாக சமூக இணையதளம் மூலம் தகவல் தெரிவித்தனர். சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 2002-03 ம் ஆண்டில் 800 பேர் இறந்ததால், இத்தகவல் சீனாவில் வைரலாக பரவி மக்களிடையே பீதி ஏற்படுத்தியது.  

ஆனால், டாக்டர் லீ வதந்தியை பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டியது. மேலும், லீ உட்பட 8 டாக்டர்களையும் வுகான் போலீசார் கடந்த மாதம் பிடித்துச் சென்று மிரட்டினர். கொரோனா வைரஸ் பற்றி பொய் தகவல் பரப்பி சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து விட்டதாக  வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினர். அதன் பிறகு வேகமாக பரவிய கொரோனா வைரசை சீனா அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.  நேற்று முன்தினம் வரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்தது. . நேற்று முன்தினம் மட்டும் 73 பேர் இறந்தனர். இவர்களில் லீயும்  ஒருவர். கொரோனா பாதிப்புக்குள்ளான 3,143 பேர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31,161 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி முதலில் எச்சரிக்கை விடுத்த டாக்டர் லீ, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானது சீன மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை ‘ஹீரோ’ என சமூக இணையதளங்களில் குறிப்பிட்டுள்ள சீன மக்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து அலட்சியமாக செயல்பட்ட சீன அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவின்  ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பத்திரிகை சார்பில் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வுகான் டாக்டர் லீ வென்லியாங் மறைவுக்கு ஆழந்த இரங்கல் தெரிவிக்கிறோம். அவரை காப்பாற்ற கடும் முயற்சிகள் எடுத்தும் நேற்று முன்தினம் காலை 2.58 மணிக்கு அவர் இறந்தார்,’ என கூறப்பட்டுள்ளது. மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ள சீன அரசு, டாக்டர் லீயின் சாவு  குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு வுகான் சென்று விரிவான விசாரணை நடத்த உள்ளது.   

ஹூண்டாய் தயாரிப்பு நிறுத்தம்

தென்கொரியாவில் உள்ள ஹூண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனமான கியா நிறுவனங்களுக்கு  5 கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 14 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் அதிகளவிலான கார்கள் இங்குதான் தயாராகின்றன. இங்கு கார் தயாரிப்புக்கு தேவையான எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் அனைத்தும் சீனாவில் தயாராகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன தொழிற்சாலைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால், தென்கொரியாவில் கார் தயாரிப்புகளை ஹூண்டாய் நிறவனம் நேற்று முன்தினம் தற்காலிகமாக நிறுத்தியது. 25 ஆயிரம் ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

கப்பலில் 61 பேருக்கு பாதிப்பு

‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சுற்றுலா கப்பலில் 3,700 பேர் பயணம் செய்தனர். இதில், கொரோனா வைரஸ் பாதித்த ஒரு பயணி கடந்த மாதம் ஹாங்காங்கில் இறக்கி விடப்பட்டார். அதன்பின் அந்த கப்பல் ஜப்பான் நோக்கி சென்றது. கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவுவதால், அந்த கப்பலில் உள்ள பயணிகளை சோதிக்க ஜப்பான் முடிவு செய்தது. அந்த கப்பல் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகம் அருகே வரும் 19ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பயணிகள் 273 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பயணிகளும் உள்ளனர்.  இதனால், பயணிகள் முககவசத்துடன் தங்கள் அறைக்குள்ளேயே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பாம்பு, வவ்வால் போனது இப்போது எறும்பு தின்னி

வுகான் நகரில் பாம்பில் இருந்தும், வவ்வால்களில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டு வருகிறது. இப்போது, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த எறும்பு தின்னியின் மூலமாக இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தை சீன விஞ்ஞானிகள் கிளப்பியுள்ளனர்.

தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானி குழு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் ஆய்வு அமைப்பு (சிசிரோ) இறங்கியுள்ளது. இதில், இந்திய விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு, தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: