ஈரான் தளபதி சுலைமானியை தொடர்ந்து அல்-கய்தா துணைத் தலைவரை கொன்றது அமெரிக்க ராணுவம்: ஏமனில் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: ‘ஏமனில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில், அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் காசிம் அல்-ரெமி சுட்டுக் கொல்லப்பட்டான். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனாக அய்மன் அல்-ஜவஹிரி இருக்கிறார். இவருடைய துணைத் தளபதியாக இருந்தவன் அல்-ரிமி (46). இவன், கடந்த 1990ம் ஆண்டில் அல்-கய்தா அமைப்பில் சேர்ந்தான். பின்லேடனுக்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்றினான். பின்லேடனுக்குப் பிறகு ஏமன் சென்று தீவிரவாதத்தில் ஈடுபட்டான். இவனுடைய தலைக்கு அமெரிக்கா ரூ.75 கோடி பரிசுஅறிவித்திருந்தது.  இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அமெரிக்க கடற்படை விமான தளத்தில் கடந்த டிசம்பர் 6ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. ராணுவ பயிற்சிக்காக வந்த சவுதி விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க கடற்படை மாலுமிகள் 3 பேர் பலியாயினர். இதையடுத்து, பயிற்சிக்கு வந்த சவுதி ராணுவத்தினர் 21 பேரும் திரும்ப அனுப்பப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-கய்தா அமைப்புதான் காரணம் என அல்-ரிமி, வீடியோ மூலம் பேட்டி அளித்தான். இதையடுத்து, ஏமனில் உள்ள அமெரிக்கப் படைகள், அல்-ரிமிக்கு குறிவைத்தன. இந்நிலையில், இவனை அமெரிக்கப் படை தனது உத்தரவின் பேரில் ேநற்று சுட்டுக் கொன்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.  அவர் அளித்து பேட்டியில், ‘‘அல்-ரிமி மரணம் அல்-கய்தாவை மேலும் முடக்கும் ,’’ என்றார். சமீபகாலத்தில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் கொல்லப்பட்ட 3வது முக்கிய நபர் அல்-ரிமி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அக்டோபரில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்-பாக்தாதியை அமெரிக்க படை கொன்றது. கடந்த ஜனவரியில் தீவிரவாதத்தை தூண்டிய ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, ஈராக்கில் டிரோன் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

Related Stories: