நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தூக்கு மத்திய அரசின் வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நிர்பயா என்ற மருத்துவ மாணவி டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சட்ட நிவாரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாட்டியாலா நீதிமன்றம் கடந்த வாரம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து கீழமை நீதிமன்ற ஆணைக்கு எதிராக மத்திய மற்றும் டெல்லி மாநில அரசு ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அதனை பரிசீலனை செய்து விசாரித்த நீதிமன்றம்,” நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன் மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,” இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் குற்றவாளி மூன்று பேரின் கருணை மனுவை ஜானாதிபதி நிராகரித்துள்ளார்.

மேலும் இதில் குற்றவாளிகள் அனைவரும் தவறான முறையில் நிவாரணம் தேட முயற்சி செய்து வருகின்றனர். இதில் அவர்கள் செயல்பாடு என்பது நாட்டு மக்களே சந்தேகிக்கும் வகையில் உள்ளது. எத்தனை நாள் இவர்கள் சட்டத்தை ஏமாற்ற முடியும். அதனால் இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து உத்தரவில்,”இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்ட நிவாரணங்களை பயன்படுத்திக்கொள்ள வழங்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் என்பது இன்னும் முடியவில்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை வரும் 11ம் தேதி ஒத்திவைப்பதாகவும், அன்று பிற்பகல் 2மணிக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். இதில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Related Stories: