காலணியை கழற்றச் சொன்ன விவகாரம்: பழங்குடியின மாணவரின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஊட்டி: காலணியை கழற்றச் சொன்ன விவகாரத்தில், பழங்குடியின மாணவரின் பெற்றோரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். முதுமலை தெப்பக்காட்டில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரு பழங்குடியின சிறுவர்களை டேய் பசங்களா இங்கே வாங்கடா.. என அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னார். அப்போது 9ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் குனிந்து திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்றினான். அந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சரின் உதவியாளர் செருப்பை கழற்ற உதவினார்.

அமைச்சரின் செருப்பை சிறுவன் கழற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் சிறுவனும், பழங்குடியினரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மசினகுடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில் தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அமைச்சரின் செருப்பை கழற்றிய சிறுவன், அவரது தாய் மற்றும் பழங்குடியினர் 50க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் தங்களது வாகனத்தில் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு தன் மீது போலீசில் புகார் கொடுத்த சிறுவன், அவனது தாய் மற்றும் பழங்குடியினர் நிர்வாகிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து பேசினார். அப்போது சிறுவன் மற்றும் அவரது பெற்றோரிடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாயார், அமைச்சர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவருக்கு எதிரான புகார் மனுவை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: