ஜோலார்பேட்டை அருகே ஆடுகளை கொல்லும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டை

*தூக்கத்தை தொலைத்த கிராமமக்கள்

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அருகே ஆடுகளை கொல்லும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இரவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி காமராஜ்புரத்தில் உள்ள பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதேபோல் கடந்த 4ம் தேதியும் ஒரு ஆட்டையும் கடித்து கொன்றது. ஆடுகளை கொன்றது சிறுத்தையா, செந்நாயா, ஓநாயா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வன அலுவலர் பரந்தாமன், வனக்காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வனப் பாதுகாவலர்கள் காமராஜ்புரத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.மேலும், நேற்று முன்தினம் சிசிடிவி கேமரா அமைத்து இரவில் கண்காணித்து வந்தனர். இருப்பினும் மர்ம விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: