தாமிரபரணி ஆற்றில் கலக்கும் பிணவறை கழிவுகள்: பொது மக்கள் அச்சம்

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. இந்த நகராட்சி வழியாக தாமிரபரணி ஆறு ஓடுகிறது. குழித்துறை நகராட்சி, உண்ணாமலைக்கடை, பாகோடு,  நல்லூர் ஆகிய பேரூராட்சிகள், பல்வேறு ஊராட்சிகளுக்கு தேவையான குடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. இதற்காக ஆற்றின் பல  இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர நேரடியாகவும், பம்பிங் முறையிலும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இப்போது வெட்டுவெந்நியில் செக்டேம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேம்  தடுப்பு சுவர்  சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேக்டேம்  அருகில் வழிபாட்டு தலங்கள், மீன்சந்தை,  ஹோட்டல்களும் உள்ளன. அதிகளவில் மக்கள்  வருவதால்  சப்பாத்து சாலை எப்போதும் நெருக்கடியாக காணப்படுகிறது.

இந்த ஆற்றின் தண்ணீர் சமீப காலமாக மாசுபட்டு வருகிறது. மார்த்தாண்டம் பகுதியில் இருந்து செல்லும் கழிவு நீரோடை உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து  வழியாக ஆற்றில் கலக்கிறது. சென்னித்தோட்டம், வடக்கு சாலை வழியாகவும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. குழித்துறை அரசு மருத்துவமனை பிணவறை கழிவு  நீர், மருத்துவ கழிவுகள், மீன் சந்தை கழிவுகள், ஹோட்டல் கழிவுகளும் இந்த ஓடையில் தான் விடப்படுகிறது.  இந்த கழிவுகள் செக்டேம் பகுதியில் ஆற்றில் கலக்கிறது. இந்த கழிவுகளால் தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபடுகிறது. சமீபகாலமாக சிக்கன் குனியா, டெங்கு,  மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. தற்போது கொரோனா பீதியும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் மாசு  கலந்து ஆபத்தானதாக மாறி இருப்பது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.

போராட்டம் நடத்த முடிவு

இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன் கூறுகையில், குழித்துறை தாமிரபரணி ஆறு சமீப காலமாக பேராபத்தை விளைவிக்கும் நிலைக்கு  மாறி உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆற்றில் கலக்கும் கழிவு நீரோடைகளை  தடுக்க வேண்டும். ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: