திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் குறைவால் விலை உயர்வு: முதல்தர பழங்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், தர்பூசணி விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்திருக்கிறது. வெளிமாநிலங்களுக்கு முதல்தர பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தர்பூசணி சாகுபடி நடைபெறுகிறது. அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 75 நாட்களில் தர்பூசணி விளைந்து பலன் தரும். கரும்பு, நெல் போன்றவற்றுக்கு போதுமான விலையில்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தினர். ஆனால், கடந்த ஆண்டு போதுமான விலை கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலான விவசாயிகள் தர்பூசணியை நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யவில்லை. தர்பூசணி சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்ததால், விளைச்சல் குறைந்தது. எனவே, இந்த ஆண்டு தர்பூசணி விலை உயர்ந்தது.

மேலும், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி, சான்றுபெற்ற விதையை இலவசமாகவும் வேளாண்துறை சார்பில் வழங்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட விலை வீழ்ச்சியால், பெரும்பாலான விவசாயிகள் தர்பூசணி சாகுபடியை நடப்பு பருவத்தில் கைவிட்டனர். எனவே, தர்பூசணி சாகுபடியில் நம்பிக்ைகயுடன் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இந்தமுறை நியாயமான விலை கிடைத்திருக்கிறது.

மேலும், தை இரண்டாவது வாரத்திலேயே பனியும், குளிரும் குறைந்து, வெயில் அதிகரிக்க தொடங்கியதால், தர்பூசணிக்கான தேவை அதிகரித்துள்ளது. நீர்ச்சத்து நிறைந்த, தாகம் தீர்த்து, உடல் சூட்டை தணிக்கும் தன்மைகொண்ட தர்பூசணி விற்பனை தற்போது அமோகமாக தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், தர்பூசணி சாகுபடி செய்த விளை நிலங்களுக்கு நேரடியாக வரும் மொத்த வியாபாரிகள், முதல் தர தர்பூசணியை கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

அதன்படி, முதல் தர தர்பூசணி ஒருகிலோ அதிகபட்சம் ரூ10 முதல் ரூ12 வரை என விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். அடுத்த ரகம் கிலோ ரூ7 முதல் ரூ9 வரை கொள்முதல் செய்கின்றனர். அதிகபட்சம் 7 கிலோ முதல் 10 கிலோ வரையுள்ள தர்பூசணி முதல் தரம் எனவும், 5 கிலோவுக்கு குறைவான தர்பூசணி அடுத்த தரம் எனவும் மதிப்பிட்டு விலையை நிர்ணயிக்கின்றனர். கடந்த ஆண்டு முதல் தர தர்பூசணி ஒரு கிலோ அதிகபட்சம் ரூ5 முதல் ரூ7 வரை மட்டுமே விைல போனது. இந்த ஆண்டு விலை உயர்ந்திருப்பது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்திருக்கிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 10 முதல் 12 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைக்கிறது. எனவே, நெல், மணிலா சாகுபடி செய்த விவசாயிகளைவிட தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், சேலம், தர்மபுரி, திண்டிவனம் போன்ற பகுதிகளிலும் இந்த ஆண்டு தர்பூசணி சாகுபடி பரப்பு குறைந்தது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைந்துள்ள தர்பூசணிக்கு வரவேற்பும், தட்டுப்பாடும் அதிகரித்திருக்கிறது.

Related Stories: